சென்னை
சென்னையில் இன்று (மே 25) ஒரே நாளில் 549 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து மொத்த பாதிப்பு 11 ஆயிரத்தை தாண்டியது.
இந்தியாவில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. தமிழகத்தில் சென்னையில் அதிக பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சென்னையில் இன்று மட்டும் புதிதாக 549 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
சென்னையில் இதுவரை 11,131 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 5,135 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர். 5,911 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு பலியான 7 பேரில் 6 பேர் சென்னையை சேர்ந்தவர்கள்.
சென்னை
தமிழகத்தில் இன்று (24-05-2020) 765 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்தை தாண்டி உள்ளது. கொரோனாவால் 8 பேர் உயிரிழந்த நிலையில் பலி எண்ணிக்கை 111 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் சராசரியாக ஒவ்வாரு நாளும் 600 பேருக்கு அதிகமாக புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது. சென்னையில் தினமும் 500க்கும் அதிகமானோருக்கு தொற்று உறுதி செய்யப்படுகிறது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 765 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் கொரோனாவால் தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16277ஆக உயர்ந்துள்ளது. வெறும் இரண்டு வாரத்தில் 8 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு தொற்று உறுதி செய்யப்பபட்டுள்ளது.
தமிழகத்தில் மற்ற மாவட்டங்களில் பாதிப்பு குறைந்து வரும் நிலையல் சென்னையில் தான் கொரோனா பாதிப்பு கடுமையாக உள்ளது. சென்னையில் இன்று ஒரே நாளில் 587 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,576 ஆக உயர்ந்துள்ளது. செங்கல்பட்டில் 46 பேருக்கும், கடலூரில் 3 பேருக்கும் அரியலூரில் ஒருவருக்கும் இன்று புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் காஞ்சிபுரத்தில் 21 பேருக்கும், கன்னியாகுமரியில் 2 பேருக்கும், கள்ளக்குறிச்சியில் 15 பேருக்கும், மதுரையில் 6 பேருக்கும், புதுக்கோட்டையில் ஒருவருக்கும், ராமநாதபுரத்தில் ஒருவருக்கும், ராணிப்பேடடையில் 2 பேருக்கும், தஞ்சாவூரில் 3 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தேனியில் 4 பேருக்கும், திருவள்ளூரில் 34 பேருக்கும், திருவண்ணாமலையில் 4 பேருக்கும், திருவாரூரில் 2 பேருக்கும், தூத்துக்குடியில் 11 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. விருதுநகரில் 13 பேருக்கும், விமான நிலைய கண்காணிப்பில் 2 பேருக்கும, ரயில்வே கண்காணிப்பில் ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று மட்டும் 833 பேர் கொரோனாவில் இருந்து குணம் அடைந்தனர். இதன் மூலம் ஒட்டுமொத்தமாக இதுவரை தமிழகத்தில் 8,324 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். தமிழகத்தில் 7,839 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதில் சென்னையில் தான் மிக அதிகமாக 5,653 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இன்று மட்டும் 12,275 சாம்பிள்கள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக 409615 சாம்பிள்கள் (மே 24 நிலவரப்படி) இதுவரை பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தனிநபர் என்று பார்த்தால் இன்று மட்டும் 11,441பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் 24ம் தேதியான இன்றுடன் சேர்த்து இதுவரை 3,91,252 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று 759 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், இறப்பு 5 ஆகவும், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 15,512 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் 625 பேருக்குத் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் 9,364 ஆக இருந்த தொற்று எண்ணிக்கை 9989 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு எதிராகப் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் தொடர்ச்சியாக மருத்துவச் சோதனையில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. இன்றும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடுமையாக அதிகரித்துள்ளது.
சென்னையும் 9 ஆயிரம் என்கிற எண்ணிக்கையைக் கடந்து 10 ஆயிரத்தை நோக்கிச் செல்கிறது. புலம்பெயர் தொழிலாளர்கள் வெளியிடங்களில் உள்ளவர்கள் தமிழகம் திரும்புவதால் அவர்கள் தொற்றுடன் வருவது கணிசமாக அதிகரித்து வருகிறது. இது தமிழகத்துக்குப் பெரிய சவாலாக உள்ளது என்று முதல்வர் பழனிசாமி இன்று தெரிவித்தார்.
சென்னையின் தொற்று எண்ணிக்கையே தினமும் தமிழக தொற்று எண்ணிக்கையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. உயிரிழந்த 103 பேரில் சென்னையில் மட்டுமே 71 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் சென்னையின் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த சென்னை மாநகராட்சி சார்பில் "நம்ம சென்னை" கொரோனா தடுப்புத் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. 36 வார்டுகளை குறிவைத்து ஆய்வுகள் நடத்த சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.
அகில இந்திய அளவில் மகாராஷ்டிராவில் 44,582 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் 15,512 என்கிற எண்ணிக்கையுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. குஜராத் அதற்கு அடுத்த இடத்தில் 13,268 என்ற எண்ணிக்கையுடன் உள்ளது. டெல்லியில் கரோனா தொற்று எண்ணிக்கை 12,319 ஆக உள்ளது.
சென்னையைத் தவிர மீதியுள்ள 16 மாவட்டங்களில் 134 பேருக்குத் தொற்று உள்ளது. 21 மாவட்டங்களில் தொற்று இல்லை. இதில் சென்னையைத் தவிர வேறு சில மாவட்டங்களிலும் மூன்று இலக்கத்தில் எண்ணிக்கை உள்ளது.
சென்னை
3 மாத கடனை தள்ளி கட்டினால் அதற்கு சராசரியாக பல லட்சங்களில் ஒவ்வொருவரும் வட்டி கட்ட வேண்டியது வரும் என்றும் எனவே அரசு வட்டி தள்ளுபடி தான் அறிவிக்க வேண்டும் என்றும் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
பா.ம.க நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
"பொதுத்துறை, தனியார் துறை வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் பெறப்பட்ட அனைத்து வகை கடன்களுக்கான மாதத்தவணை செலுத்துவதை ஆகஸ்ட் வரை மேலும் 3 மாதங்களுக்கு ஒத்திவைத்து ரிசர்வ் வங்கி ஆணையிட்டுள்ளது. கொரோனா வைரஸ் அச்சத்தாலும், ஊரடங்காலும் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மக்களுக்கு இது நிம்மதியை அளிக்கும் என்றாலும் கூட, முழுமையான தீர்வு அல்ல. கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக இந்தியப் பொருளாதாரம் கடுமையான வீழ்ச்சியை எதிர்கொண்டு வருகிறது. லட்சக்கணக்கான மக்கள் வேலை இழந்து வாடுகின்றனர். சுயதொழில் செய்பவர்கள் வருவாயை இழந்து தவிக்கின்றனர். அவர்களால் மாதக்கடன் தவணையைச் செலுத்த முடியாது என்பதால், அவர்களுக்கு மாதக்கடன் தவணை செலுத்துவதில் இருந்து 6 மாதங்களுக்கு விலக்கு அளிக்கும்படி கடந்த மார்ச் மாதம் பா.ம.க வலியுறுத்தியது. ரிசர்வ் வங்கியும் அதையேற்று முதல் கட்டமாக 3 மாதக் கடன் தவணைகளை ஒத்திவைக்க வங்கிகளை அனுமதித்தது.
அதன் பின்னர் இரு மாதங்கள் கடந்து விட்ட நிலையில், கள நிலைமையில் எந்தவித முன்னேற்றமும் இல்லை. ஒருபுறம் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டாலும் கூட, மறுபுறம் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில் கடன்தாரர்களுக்கு வருமானம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் இல்லை. இத்தகைய சூழலில் ஆகஸ்ட் 31-ம் தேதி வரைக்குமான கடன் தவணைகளைச் செலுத்த வேண்டாம் என ரிசர்வ் வங்கி அறிவித்திருப்பது மிகப்பெரிய நெருக்கடியிலிருந்து கடன்தாரர்களைக் காப்பாற்றியிருக்கிறது. வருமானமே இல்லாத சூழலில் கடன் தவணையைச் செலுத்துவது சாத்தியமற்றது.
ஒருவேளை கடன் தவணையைச் செலுத்தியே தீர வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டு இருந்தால், அதற்காக அவர்கள் தங்களின் உடமைகளை வந்த விலைக்கு விற்க வேண்டியிருந்திருக்கும்; அதற்கு வழி இல்லாதவர்கள் கடன் தவணை கட்டத் தவறியவர்களாக அறிவிக்கப்பட்டு, இனிவரும் காலங்களில் அவர்கள் கடன் பெறும் தகுதி குறைக்கப்பட்டிருக்கும். அதிலிருந்து அவர்கள் விடுதலை பெற்றுள்ளனர்.
ஆனால், அதற்காக அவர்கள் கொடுக்கப்போகும் விலை மிகவும் அதிகமாகும். கடந்த மார்ச் மாதம் கடன் தவணை ஒத்திவைப்பு அறிவிக்கப்பட்ட போது, ஒத்திவைக்கப்பட்ட தவணைத் தொகைகளுக்கான வட்டி முழுமையும் தள்ளுபடி செய்யப்படும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், வங்கிகளோ அதற்கு மாறாக, ஒத்திவைக்கப்பட்ட 3 மாதத் தவணைகளுக்கு உரிய தொகையை அசலுடன் சேர்த்து, அந்தத் தொகைக்கும் கடன் பருவம் முடிவடையும் வரை வட்டி செலுத்த வேண்டும் என்று நெருக்கடி கொடுத்தன.
வீட்டுக்கடன் பெற்ற ஒருவர் மாதம் ரூ.50 ஆயிரம் வீதம் 3 மாதங்களுக்குத் தவணை செலுத்தாமல் இருப்பதாகவும், அவருக்கு இன்னும் 15 ஆண்டு தவணைக் காலம் இருப்பதாகவும் வைத்துக் கொள்வோம். அவர் கடன் தவணைக் காலத்தில் கூடுதல் வட்டியாக மட்டும் 4 லட்சத்து 9,500 ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும்.ஒருவர் 3 மாதங்களுக்குச் சேர்த்து ரூ.1.50 லட்சம் தவணை செலுத்தாமல் இருந்ததற்காக, அந்தத் தொகையையும் வசூலித்து விட்டு, கூடுதலாக அதை விட 3 மடங்கு தொகையை வட்டியாக வங்கிகள் வசூலிப்பது எந்த வகையிலும் நியாயமானதாக இருக்காது; அது அறமும் அல்ல.
இப்போது கூடுதலாக 3 மாதங்களுக்கு கடன் தவணைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், மாதக் கடன் தவணை ரூ.50 ஆயிரத்தைச் செலுத்தாமல் இருப்பவர்கள், கூடுதலாக ரூ. 8 லட்சத்திற்கும் மேல் வட்டி செலுத்த வேண்டும். சுமையைச் சுமக்க முடியாமல் திணறிக் கொண்டிருப்பவனின் தலையிலிருந்து சிறிய சுமையை இறக்கி வைத்துவிட்டு, அதற்கு பதிலாக தாங்க முடியாத பெரும் சுமையைச் சுமத்துவது எப்படி சரியாக இருக்கும்? இது கடன்தாரர்களை மீளவே முடியாத கடன் சுமையில் ஆழ்த்தி விடும்.
கடன்தாரர்களுக்கு மத்திய அரசும், இந்திய ரிசர்வ் வங்கியும் அளிக்கும் சலுகை என்பது மாதக்கடன் தவணையை ஒத்திவைப்பது மட்டுமல்ல... அதற்கான வட்டியை முழுமையாகத் தள்ளுபடி செய்வதும் தான். எனவே, ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட மே மாதம் வரையிலான 3 மாத கடன் தவணை ஒத்திவைப்பு மற்றும் இப்போது அறிவிக்கப்பட்டுள்ள ஆகஸ்ட் வரையிலான 3 மாதக் கடன் தவணை ஒத்திவைப்புக்கான வட்டியைத் தள்ளுபடி செய்ய வேண்டும்; எந்த விதமான கூடுதல் கட்டணமும் இன்றி மார்ச் 31-ம் தேதியன்று எவ்வளவு நிலுவைத் தொகை உள்ளதோ, அதை மட்டும், மாதக் கடன் தவணைத் தொகையை அதிகரிக்காமல் வசூலிக்குமாறு வங்கிகளுக்கு மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் ஆணையிட வேண்டும்". இவ்வாறு ராமதாஸ் அறிக்கையில் கூறியுள்ளார்.
தமிழகத்தில் இன்று 688 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 12,448 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் 552 பேருக்குத் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் 7,120 ஆக இருந்த தொற்று எண்ணிக்கை 7,672 ஆக அதிகரித்துள்ளது.
688 என்கிற மொத்தத் தொற்று எண்ணிக்கையில் 80.2 சதவீதத் தொற்று சென்னையில் (552) உள்ளது. தமிழகத்தின் மொத்த எண்ணிக்கை 12,448 -ல் சென்னையில் மட்டும் 7,672 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது மொத்த தமிழக எண்ணிக்கையில் 61.67 சதவீதம் ஆகும்.
மொத்த எண்ணிக்கையில் 84 பேர் இறந்துள்ள நிலையில் இறப்பு சதவீதம் .67% என்கிற அளவில் உள்ளது. 4,895 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் மொத்த எண்ணிக்கையில் டிஸ்சார்ஜ் சதவீதம் 39.32 சதவீதமாக உள்ளது.
தமிழகத்தில் கரோனா தொற்றுக்கு எதிராகப் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் தொடர்ச்சியாக மருத்துவச் சோதனையில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. இன்றும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
நாளுக்கு நாள் தமிழ்நாட்டின் மொத்த எண்ணிக்கை மற்ற மாநிலங்களின் தினசரி எண்ணிக்கையைவிட ஒவ்வொரு நாள் எண்ணிக்கையையும் முறியடித்து 12 ஆயிரம் என்கிற எண்ணிகையைக் கடந்து இந்திய அளவில் இரண்டாவது இடத்துக்கு வந்துள்ளது. சென்னையும் 7 ஆயிரத்தைக் கடந்து 8 ஆயிரத்தை நோக்கிச் செல்கிறது. புலம்பெயர் தொழிலாளர்கள் வெளியிடங்களில் உள்ளவர்கள் தமிழகம் திரும்புவதால் அவர்கள் தொற்றுடன் வருவது கணிசமாக அதிகரித்து வருகிறது.
அகில இந்திய அளவில் மகாராஷ்டிராவில் 35,058 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் 12,448 என்கிற எண்ணிக்கையுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. குஜராத் அதற்கு அடுத்த இடத்தில் 11,745 என்ற எண்ணிக்கையுடன் உள்ளது. டெல்லியில் கொரோனா தொற்று எண்ணிக்கை 10,054 ஆக உள்ளது.
சென்னை
மேற்குவங்கம் - வங்கதேசம் இடையே நாளை மாலை ஆம்பன் (Amphan) புயல் கரையை கடக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தென்கிழக்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, கடந்த சனிக்கிழமை, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. பின்னர் இது, புயலாக உருவெடுத்து, வடக்கு நோக்கி நகர்ந்தபடி உள்ளது. இது மேலும் வலுவடைந்து தற்போது சூப்பர் புயலாக மாறியுள்ளது. அதாவது மணிக்கு 230 கி.மீ வேகத்தில் காற்று வீசும் அளவுக்கு வலுவான புயல் இது. புயல், அரபிக் கடலில் இருந்து குளிர்மையான காற்றை இழுக்கிறது. எனவே, தென் கர்நாடகா, வடக்கு கேரளா, வட தமிழகம் உள்ளிட்ட பல பகுதிகளில் கடந்த இரு தினங்களாக பரவலாக மழை பதிவானது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதாவது: மேற்கு வங்கம்- வங்கதேசம் இடையே, நாளை மாலை ஆம்பன் புயல் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அது கூறியது. முன்னதாக, "அம்பன் இப்போது ஒரு 'சூப்பர் சூறாவளி' என்ற நிலைக்கு மாறியுள்ளது. இது ஒரு தீவிரமான புயலாகும், இந்த அளவுக்கு வலுவான ஒரே புயல் இதற்கு முன்பு ஒடிசாவில் 1999ம் ஆண்டு பதிவானது. அது மிகவும் ஆபத்தானது" என்று தேசிய பேரிடர் பதிலளிப்பு படை டி.ஜியான, எஸ்.என். பிரதான் தெரிவித்துள்ளார்.
சென்னை வானிலை ஆய்வு மையம் மேலும் கூறுகையில், சேலம் அணைக்கட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 5 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. அரூர், காவேரிபாக்கம், பாப்பிரெட்டிப்பட்டியில் தலா 2 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது.
அடுத்த 24 மணி நேரத்தில், கோவை, நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும். இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேநேரம், சென்னையில், வானம் மேக மூட்டத்துடன் இருக்கும். கடல் சீற்றத்தோடு இருக்கும் என்பதால், மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம்.
மேற்கு வங்க கடற்கரையிலிருந்து 650 கி.மீ தொலைவில் தற்போது ஆம்பன் புயல் நிலை கொண்டுள்ளது. மத்திய வங்கக் கடல், மேற்கு வங்கக் கடல் பகுதி கொந்தளிப்போடு காணப்படும். நாளை புயல் கரையை கடக்கும்போது அதன் பாதிப்பு மேற்கு வங்கம் மட்டுமின்றி, ஒடிசாவிலும் இருக்க கூடும் என்பதால், தேசிய பேரிடர் மீட்பு படையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். பல லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
சென்னை
தமிழகத்தில் மேலும் 639 பேருக்கு கொரோனா உறுதிபடுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 11,224 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கடந்த 3 நாட்களாக குறைவாக இருந்த கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக 500க்கும் குறைவான பாதிப்புகள் வந்தது. ஆனால் தற்போது அந்த எண்ணிக்கை மீண்டும் 500ஐ தாண்டியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 11224 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 480 பேருக்கு இன்று கொரோனா ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,750 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 11224 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் 634 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை கொரோனா தொற்றால் பாதித்த 11, 224 பேரில் 4, 172 பேர் குணமடைந்துள்ளனர்.
தமிழகத்தில் இன்று 4 பேர் கொரோனாவால் பலியாகி உள்ளனர். தமிழகத்தில் மொத்த பலி எண்ணிக்கை 78 ஆக உயர்ந்துள்ளது.
சென்னை
பத்தாம் வகுப்பு தேர்வு எழுத வரும் மாணவர்களுக்கு பஸ்வசதி செய்து தரப்படும் என பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்ட பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு வரும் ஜூன் 1 முதல் 12 வரை நடைபெற உள்ளது. தள்ளிவைக்கப்பட்ட பிளஸ் 1 தேர்வு ஜூன் 2 லும், மார்ச் 24 ல் நடந்த பிளஸ் 2 தேர்வில் பங்கேற்காத 37 ஆயிரம் மாணவர்களுக்கு ஜூன் 4ல் தேர்வு நடக்கும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், கொரோனா நெருக்கடி நிலை மாறி இயல்பு நிலை திரும்பிய பிறகே பத்தாம் வகுப்பு தேர்வுகளை நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.
இந்நிலையில், அமைச்சர் செங்கோட்டையன் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் தெரிவித்துள்ளதாவது:
தேர்வு மையத்திற்கு வரும் மாணவர்கள் எந்த பகுதியில் இருந்தாலும், அவர்களை அழைத்து வருவதற்கும், தேர்வு முடிந்த பிறகு மீண்டும் அந்த பகுதிகளில் சென்று விடுவதற்கும் பஸ் வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாணவர்கள், சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில், அதற்கான ஏற்பாடுகள் வகுப்பறைகளில் செய்யப்படுகிறது. மாணவர்கள் அனைவரும் மாஸ்க் அணிந்து தேர்வுக்கு வர வேண்டும் என கேட்டு கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்தில் பெற்றோர் மீது இருந்த முன்விரோதம் காரணமாகக் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று வீட்டில் தனியாக இருந்த சிறுமியைக் கட்டிப்போட்டு, பெட்ரோல் ஊற்றி எரித்த அ.தி.மு.க பிரமுகர்கள் இருவர், சிறுமியை எரித்தது ஏன் என காவல்துறையிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில், சிறுமி கொடுத்த மரண வாக்குமூலத்தின் அடிப்படையில் அ.தி.மு.க பிரமுகர்கள் முருகன் மற்றும் கலியபெருமாள் இருவரையும் அன்றிரவே விழுப்புரம் காவல் துறையினர் கைது செய்தனர்.
இதனிடையே, விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி சிறுமி நேற்று, திங்கள், காலை உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவத்திற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், அரசியல் பிரமுகர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் என அனைவரும் கண்டனம் தெரிவித்தனர்.
சிறுமியைத் அ.தி.மு.க நிர்வாகிகள் தீயிட்டுக் கொளுத்தியது தொடர்பாக 7 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்கத் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் விழுப்புரம் மாவட்ட ஆட்சியருக்கு நேற்று உத்தரவிட்டது.
சிறுமியைத் தீயிட்டு எரித்த குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டது நாங்கள்தான் எனக் கைது செய்யப்பட்ட முருகன் மற்றும் கலியபெருமாள் காவல் துறை விசாரணையில் ஒப்புக்கொண்டுள்ளனர் என்கிறது காவல்துறை.
எதற்காகச் சிறுமியை எரித்தோம் என்று அவர்கள் வாக்குமூலமும் அளித்துள்ளனர்.
"அவர்களுக்குள் பல வருடங்களாக முன் விரோதம் இருக்கிறது. இதனால் இவர்கள் இரு தரப்பினரிடையே நிறையச் சண்டைகள் நேர்ந்துள்ளது. 7 வருடங்களுக்கு முன்பு, சிறுமியின் தந்தை ஜெயபாலின் தம்பியின் கையை குற்றவாளிகள் வெட்டியுள்ளனர். முன்னதாக, கலியபெருமாள் வீட்டின் அருகே ஒரு ஏக்கர் நிலத்தைக் குத்தகைக்கு எடுத்து 2010 ஆண்டிலிருந்து ஜெயபால் விவசாயம் செய்து வந்துள்ளார். அதையடுத்து, அந்த நிலத்தை விட்டுக் கொடுக்குமாறு முருகன் தகராறு செய்துள்ளார். இதனால், இவர்களுக்குள் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்தது. இதனால், இவர்கள் ஜெயபாலையும் தாக்கி இருக்கின்றனர்," என்று கூறியுள்ளார் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார்.
இதனையடுத்து, கடந்த சனிக்கிழமை இரவு ஜெயபால் கடைக்குப் பீடி வாங்கவந்த பிரவீன்குமார் என்பவர் அவரது பெரிய மகனைத் தாக்கியுள்ளார். இந்த பிரச்சனை முருகன் மற்றும் கலியபெருமாள் தூண்டுதலின் பேரில் நடைபெற்றதென்று மறுநாள் காலை அவர்கள் மீது புகார் கொடுக்க திருவெண்ணெய் நல்லூர் காவல் நிலையத்திற்குச் சென்றுள்ளார். இதையறிந்த முருகன் மற்றும் கலியபெருமாள், எங்கள் மீது புகார் கொடுக்க செல்கிறாயா என்ற கோபத்தில் ஜெயபால் வீட்டிற்குச் சென்றபோது கடையில் சிறுமி இருந்துள்ளார். எங்களுக்கும் அவரது பெற்றோருக்கும் இடையே நடக்கும் பிரச்சனைகளில் அந்த சிறுமி அதிகமாக வாய் பேசும். ஆகவே, வீட்டில் சிறுமி மட்டும் இருக்கவே, அச்சிறுமியின் வாயை அடைத்துக் கட்டிப்போட்டு எரித்து விட்டோம் எனக் குற்றவாளிகள் கொலைக்கான வாக்குமூலம் கொடுத்துள்ளதாக, தெரிவித்துள்ளார் காவல் கண்காணிப்பாளர்.
சென்னை
இந்தியாவையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் தமிழகத்திலும் வேகமாக பரவி வருகிறது. வைரஸ் பரவும் வேகத்தை கட்டுப்படுத்த மாநிலத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனாலும், வைரசின் தாக்கம் தீவிரமடைந்து வருகிறது.
நேற்றைய நிலவரப்படி, தமிழகத்தில் 8 ஆயிரத்து 2 பேருக்கு வைரஸ் பரவி இருந்தது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2 ஆயிரத்து 51 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டிருந்தனர். கொரோனா பாதிப்பிற்கு பலியானோர் எண்ணிக்கை 53 ஆக இருந்தது.
இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான இன்றைய நிலவரத்தை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.
அந்த தகவலின்படி, மாநிலத்தில் இன்று புதிதாக 716 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 8 ஆயிரத்து 718 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 134 ஆக உயர்ந்துள்ளது.
ஆனாலும், கொரோனாவுக்கு இன்று ஒரே நாளில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளது.
நாளை (11-05-2020) முதல் 34 வகை கடைகள் திறக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன் விபரம் வருமாறு:
1) டீக்கடைகள் (பார்சல் மட்டும்) 2) பேக்கரிகள் (பார்சல் மட்டும்) 3) உணவகங்கள் (பார்சல் மட்டும்) 4) பூ, பழம், காய்கறி மற்றும் பலசரக்கு கடைகள். 5) கட்டுமானப் பொருட்கள் விற்கும் கடைகள். 6) சிமெண்ட், ஹார்டுவேர், சானிடரிவேர் விற்கும் கடைகள். 7) மின் சாதனப் பொருட்கள் மற்றும் பழுது நீக்கும் கடைகள். 8) மொபைல் போன் விற்கும் மற்றும் பழுதுநீக்கும் கடைகள். 9) கணினி விற்பனை மற்றும் பழுது நீக்கும் கடைகள். 10) வீட்டு உபயோக இயந்திரங்கள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் விற்கும் கடைகள். 11) மோட்டார் இயந்திரங்கள் மற்றும் பழுது நீக்கும் கடைகள். 12) கண்கண்ணாடி மற்றும் பழுது நீக்கும் கடைகள். 13) சிறிய நகைக் கடைகள் ( குளிர்சாதன வசதி இல்லாதவை). 14) சிறிய ஜவுளிக் கடைகள் ( குளிர்சாதன வசதி இல்லாதவை) – ஊரக பகுதிகளில் மட்டும். 15) மிக்ஸி, கிரைண்டர் பழுது நீக்கும் கடைகள். 16) டிவி விற்பனை மற்றும் டிவி பழுது நீக்கும் கடைகள். 17) பெட்டி கடைகள். 18) பர்னிச்சர் கடைகள். 19) சாலையோர தள்ளுவண்டி கடைகள். 20) உலர் சலவையகங்கள். 21)கூரியர் மற்றும் பார்சல் சர்வீஸ். 22) லாரி புக்கிங் சர்வீஸ். 23) ஜெராக்ஸ் கடைகள். 24) இரண்டு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகன விற்பனை நிலையங்கள். 25) இரண்டு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகன பழுது நீக்கும் கடைகள். 26) நாட்டு மருந்து விற்பனை கடைகள். 27) விவசாய இடுபொருட்கள் மற்றும் பூச்சி மருந்து விற்பனை கடைகள். 28) டைல்ஸ் கடைகள். 29) பெயிண்ட் கடைகள். 30) எலக்ட்ரிகல் கடைகள். 31) ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள் விற்பனை கடைகள். 32) நர்சரி கார்டன்கள். 33) மரக்கடைகள் மற்றும் பிளைவுட் கடைகள். 34) மரம் அறுக்கும் சாமில்.
தி.மு.கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான தொகுதி மேம்பாட்டு நிதியை இரண்டு வருடங்களுக்கு (2020-21 மற்றும் 2021-22) மட்டும் நிறுத்தி வைக்கிறோம் என்று அறிவித்து விட்டு, இப்போது 2019-20ஆம் ஆண்டிற்கான தொகுதி மேம்பாட்டு நிதி ஒதுக்கப்பட்டு, அதற்கான பணிகள் துவங்கி விட்ட நிலையில், அந்த நிதியையும் ரத்து செய்ய மத்திய அரசின் புள்ளிவிவரங்கள் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் சுற்றறிக்கை அனுப்பியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
உரிமையின் அடிப்படையில் கொடுக்க வேண்டியதை கொடுக்காமல் நிறுத்தி வைப்பதும், கொடுத்ததைப் பாதியில் பறிப்பதும் பண்பாடாகாது. கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தைச் சீர்செய்யவோ, நெருக்கடி சூழ்ந்துள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கவோ தயாராக இல்லாத மத்திய அரசு, இப்படி மக்கள் பிரதிநிதிகளுக்குரிய உரிமைகளையும் பறித்து, மூன்று வருடத் தொகுதி மேம்பாட்டு நிதியை நிறுத்துவது வேதனையானது மட்டுமல்லாமல் மக்கள் பிரதிநிதிகளை அவமதிக்கும் செயலும் ஆகும்.
உச்சநீதிமன்றமே அங்கீகரித்துள்ள தொகுதி மேம்பாட்டு நிதியை இப்படி நிறுத்துவது, கொரோனா பணிகளில் மத்திய அரசுக்கே போதுமான ஆர்வம் இல்லையோ என்ற ஐயப்பாட்டினை எழுப்புவதுடன், எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தம் தொகுதி மக்களுக்குத் தேவைப்படும் எந்த ஒரு பணியையும் செய்துவிடக் கூடாது என்ற உள்நோக்கத்துடன் மத்திய பா.ஜ.க. அரசு நடந்து கொள்வது மக்களாட்சித் தத்துவத்திற்கும், நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கும் மாறானது.
பா.ஜ.க நாடாளுமன்ற உறுப்பினர்களே கூட, இந்த முடிவை மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல், மவுனமாக வேதனையுறும் நிலை ஏற்பட்டிருக்கிறது.
ஆகவே 2019-20 ஆம் ஆண்டிற்கான நாடாளுமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியை நிறுத்தி, மக்களுக்குத் துரோகம் இழைத்திடும், சுற்றறிக்கையை மட்டுமின்றி, ஏற்கனவே இரு ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள உத்தரவையும் திரும்பப் பெற வேண்டும் என்று மத்திய அரசைக் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
நீதிமன்ற நிபந்தனைகள் பின்பற்றப்படாததால் டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூட உத்தரவிட்ட உயர் நீதிமன்றம், மறு உத்தரவு வரும் வரை திறக்கக்கூடாது என்றும், ஆன்லைனில் விற்று டோர் டெலிவரி செய்யலாம் என்றும் உத்தரவிட்டுள்ளது.
ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், மே 7-ம் தேதி முதல் மதுக்கடைகளைத் திறக்க அனுமதித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இதனை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், மே 6-ல் பிறப்பித்த இடைக்கால உத்தரவில் தனிமனித இடைவெளி பின்பற்ற வேண்டும், ஒருவருக்கு ஒரு பாட்டில் மட்டுமே வழங்க வேண்டும், மூன்று நாட்களுக்கு ஒரு முறை தான் ஒருவருக்கு மது வழங்க வேண்டும்.
அதற்கு மதுபானம் வாங்குபவரின் ஆதார் எண்ணைப் பதிவு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட நிபந்தனைகளை விதித்தது. அவை மீறப்படும் பட்சத்தில் கடைகளை மூட உத்தரவிட நேரிடும் எனவும் எச்சரித்து அனுமதி அளித்தது.
இந்நிலையில் தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரியும், அதுவரை நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளைக் கண்டிப்புடன் பின்பற்ற உத்தரவிடக் கோரியும் மக்கள் நீதி மய்யக் கட்சியின் அமைப்பு பொதுச் செயலாளரும், ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரியுமான மௌரியா வழக்குத் தொடர்ந்தார்.
அவரது மனுவில், “மதுபானத்துக்காக குடிமகன்கள் அண்டை மாநிலங்களுக்குச் செல்லக் கூடும் என்பதால் டாஸ்மாக் கடைகளைத் திறப்பதாக அரசு கூறும் காரணங்கள் ஏற்புடையதாக இல்லை. ஊரடங்கு அமலில் உள்ளபோது அனுமதியின்றி அண்டை மாநிலங்களுக்குச் செல்பவர்களைத் தடுக்க வேண்டியது அரசின் கடமை.
கரோனா பரவாமல் தடுக்க உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டும் எனக் கூறி வரும் நிலையில், நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும் மதுவை விற்க அனுமதிப்பது நோய் பாதிப்பை அதிகரிக்கும்'' என்று குறிப்பிட்டார்.
இந்த மனு நீதிபதிகள் வினித் கோத்தாரி மற்றும் நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் சார்பில் வழக்கறிஞர் கார்த்திக் ராஜா ஆஜராகி வாதிட்டார்.
நேற்று உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு முறையாகப் பின்பற்றப்படவில்லை. மே 6-ம் தேதி அன்று நீதிமன்ற உத்தரவில் தனி மனித இடைவெளி, கூட்டம் சேரக்கூடாது, 5 பேருக்கு மேல் நிற்கக்கூடாது என்ற உத்தரவு மீறப்பட்டதாகக் கூறினார். அதற்கான புகைப்பட ஆதாரங்களையும் கார்த்திக் ராஜா தாக்கல் செய்தார்.
மேலும் அவர் வாதிடுகையில், ''தனிமனித இடைவெளி கடைப்பிடிக்கப்படவில்லை. கூட்டம் அதிகமாகக் கூடியது. தனி மனித இடைவெளி கடைப்பிடிக்க முடியாதபோது மதுபானம் அத்தியாவசியப் பொருட்களின் கீழ் வராத நிலையில் எப்படி அனுமதிக்கப்படுகிறது. குற்றச்செயல்கள் அதிகம் நடக்கின்றது. காய்கறி மளிகைப்பொருட்கள் ஆன்லைனில் விநியோகிப்பது போல் மதுபானங்களை விநியோகிக்கலாம்'' என்றார்.
ஆன்லைனில் 2 பாட்டில்களுக்கு மேல் கொடுக்கக்கூடாது, பில் தரவேண்டும். ஆதார் எண் அவசியம், தனி மனித இடைவெளி, கும்பல் சேரக்கூடாது, இவை மீறப்பட்டால் கடைகளை அடைக்கும்படி உத்தரவிட நேரிடும் என்று நீதிமன்றம் ஏற்கெனவே தெரிவித்திருந்தது சுட்டிக்காட்டப்பட்டது.
அதேபோல வழக்கறிஞர் ஜி. ராஜேஷ் என்பவர் தொடர்ந்த வழக்கில் தற்போது டாஸ்மாக் கடைகள் திறந்து இருப்பதால் தனிமனித இடைவேளை பின்பற்றவில்லை எனவே ஆன்லைன் மூலம் மட்டுமே விற்பனை செய்ய அனுமதி அளிக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்தார்
குன்றத்தூர் சேர்ந்த வழக்கறிஞர் திலீபன் தாக்கல் செய்த வழக்கில் சென்னையில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்த நிலையில் இதே போல சென்னை சுற்றியுள்ள மாவட்டங்களிலும் டாஸ்மாக் கடைகளை மூட கோரி ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது
இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மூன்று வழக்கிலும் வழக்கிலும் மதுக்கடைகளை திறக்க பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் வினித் கோத்தாரி மற்றும் நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா அமர்வு
நாளை முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படக்கூடாது என்றும், ஆன்லைன் மூலம் டோர் டெலிவரி செய்யலாம் என்றும் டாஸ்மாக் கடைகள் உடனடியாக மூடப்பட வேண்டும். மறு உத்தரவு வரும் வரை திறக்கக்கூடாது என்று உத்தரவிட்டு வழக்கை மே.14-க்கு ஒத்திவைத்தது. இதனால் நாளை முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது.
சென்னை
தமிழகத்தில் இன்று புதிதாக 580 பேருக்கு கொரோனா நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை ஐந்தாயிரத்தை தாண்டியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 5409 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக, சென்னையில் 316 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இன்று 2 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,644 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை தமிழகத்தில், குணமடைந்தோர் 1547 பேராகும். உயிரிழப்பு 37 என்று அரசு அறிக்கை தெரிவிக்கிறது.